search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை கள்ளநோட்டு கும்பல்"

    கோவை கள்ளநோட்டு கும்பலுடன் அரசியல்பிரமுகர்கள், தொழில் அதிபர்களுக்கு தொடர்பு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. #fakecurrency
    கோவை:

    கோவை சாய்பாபா காலனியில் கடையை வாடகைக்கு எடுத்து கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பல் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கடந்த 2 மாதமாக இங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை அச்சடித்துள்ளனர். பின்னர் தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    இந்த கும்பலில் ஏஜெண்டுகள் பலர் உள்ளனர். அவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கும் பிரிந்து சென்று ஒரிஜினல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் கள்ள நோட்டுகளையும் கலந்து புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஊட்டியில் கோடை சீசன்களை கட்டி இருந்தது. நாடு முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்ததால் அங்கு கூட்டம் அலைமோதி காணப்பட்டது. இதை பயன்படுத்தி கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    இதற்காக கோவையில் இருந்து கள்ளநோட்டுகளை ஐஸ் வியாபாரிகள் போல நடித்து மோட்டார் சைக்கிள்கள் மூலம் ஐஸ்கிரீம் டப்பாவுக்குள் மறைத்து வைத்து கடத்தி சென்றுள்ளனர். சில நேரங்களில் பஸ்களில் சாதாரண பயணிகள் போல பயணம் செய்தும் கள்ளநோட்டுகளை கொண்டு சென்று ஊட்டியில் புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    கிதர் முகமது

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிதர் முகமதுவின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அரசியல்பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் எண்கள் இருந்துள்ளது. அவர்கள் யார்-யார்? எந்தெந்த வகைகளில் இவர்களுக்கு உதவி செய்தார்கள்? என விசாரணை நடந்து வருகிறது.

    கோவையில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகள் ஏஜெண்டுகள் மூலம் கர்நாடகாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தல் நேரத்தில் புழக்கத்தில் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கும்பல் தலைவனான சுந்தருக்கு சர்வதேச அளவில் கள்ளநோட்டு கும்பல் மற்றும் கேரளாவை சேர்ந்த ஹவாலா கும்பலுடன் தொடர்பு இருந்துள்ளது. அதன் மூலம் குஜராத்தில் இருந்து நவீன வெள்ளை காகிதங்களை வரவழைத்து கள்ளநோட்டுகளை அச்சடித்துள்ளனர்.

    சுந்தர் பிடிபட்டால் கள்ளநோட்டு கும்பலின் மொத்த நெட்வொர்க் பற்றியும் தகவல் கிடைக்கும் என போலீசார் கருதுகின்றனர். எனவே சுந்தரை கைது செய்வதற்காக கூடுதல் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சுந்தர் மீது கேரளாவில் கள்ளநோட்டு வழக்கு, யானை தந்தம் கடத்திய வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. தனிப்படை போலீசார் கேரளாவில் உள்ள அவரது நண்பர்கள் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரமடையில் அவர் தங்கி இருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு கள்ளநோட்டுகளோ, அச்சடிக்க தேவையான பொருட்களோ இல்லை.

    கைதான கிதர் முகமது இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இவரையும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஆனந்தையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர். #fakecurrency
    ×